
8 வயதுக்குள்ளாக இருப்பவர்கள் ஏதேனும் குற்றம் இழைத்தால், அவர்களை பொதுவான சட்டத்தில் தண்டிப்பதை தவிர்த்து, அவர்கள் திருந்துவதற்காகவும், நெறிப்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டது சிறார் பாதுகாப்புச் சட்டம்.
18 வயதுக்கு உள்ளாக இருக்கும் சிறார்களை பாதுகாத்து, அக்கறையுடன் கவனித்து, ஒழுக்கநெறிகளையும், தான் செய்தது தவறு என்பதை உணரவைக்கும் கூடங்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சிறார் சீர்திருத்த பள்ளிகள் உருவாக்கப்பட்டது.
வதைக்கூடங்களா?
ஆனால், தமிழகத்தில் உள்ள சீர்திருத்தப் பள்ளிகளைப் பார்த்தால் “ஏனோ-தானோ” என்றும் “வதைக்கூடங்களாக” “ஒழுங்கற்ற கூடமாகவே” காட்சியளிக்கின்றன. அதிலும், கடந்த 2015ம் ஆண்டின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது, குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை வழங்கப்பட்ட சிறார் எண்ணிக்கைக்கும், வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.
சட்டத்தின் ஓட்டைகள்
சிறார் சீர்திருத்தப் பள்ளிகளையும், அவர்களை ஒழுங்கு படுத்தும் சட்டங்களும் மாநிலத்தில் முறையாக சீராகச் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கும் ஒரு செயல்பாட்டு முறை இல்லை.
இதனால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றம்செய்யும் சிறார்கள் எளிதாக தப்பி விடுகிறார்கள் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், சிறார் சீர்திருத்தப் பள்ளியிலேயே நீண்ட நாட்கள் சிலர் அடைத்து கண்காணிக்கப்படுகிறார்கள், பல வழக்குகள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன இப்படியும் பல்வேறு குளறுபடிகள் தொடர்கின்றன.
குறிப்பிட்ட குற்றங்கள்
கடந்த 2015ம் ஆண்டு திருத்தம் செய்து கொண்டு வரப்பட்ட சிறார் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு நீதிச்சட்டம் 2015, முழுமையாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அதேசமயம், சில குறிப்பிட்ட குற்றங்களில்(அதாவது பலாத்காரம்) ஈடுபடும் சிறுவர்களை சிறார் நீதிச்சட்டத்தில் தண்டிக்காமல், பொதுவான சட்டத்தில் தண்டிக்கவும் அனுமதி அளிக்கிறது.
ஆனால், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், தமிழகத்தில் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது என்பது குறைந்து வருகிறது.
18வயதுக்கு உட்பட்டவர்கள்
கடந்த 2015 தேசிய குற்ற அறிக்கையின்படி, நாடு முழுவதும் 1,838 சிறார்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 1,385 பேர், ஏறக்குறைய 16 வயதில் இருந்து 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
தமிழ்நாட்டில் எப்படி
தமிழகத்தில் மட்டும் கடந்த 2015ம் ஆண்டு திருட்டு வழக்குகளில் 507 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீட்டுக்குள் அத்துமீறுதல், கொள்ளை ஆகியவற்றில் 157 பேர், கொலை வழக்குகளில் 136 பேர், சாதிச்சண்டை, கலவரம் போன்றவற்றில் 85 பேர், வழிப்பறியில் 73 பேர், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதில் 71 பேர், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ததில் 60 பேர் என வழக்குகள் பதிவாகியுள்ளன.
எச்சரிக்கை அபராதம்
அதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 454 சிறார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 63 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் அனுப்பப்பட்டனர். ஆனால், மற்ற குற்றவாளிகள் யாரும் சீர்திருத்த பள்ளிக்களுக்கு அனுப்பப்படவே இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் 25 பேருக்கு படிப்பறிவு இல்லை.
மதுரை, சென்னை
மதுரையில் 129 சிறார்கள் குற்ற வழக்குகளில் சிக்கினார்கள், அதில் 120 பேர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். சென்னையில் மொத்தம் 526 சிறார்கள் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட போதிலும், அதில் 97 பேர் மட்டுமே சீர்திருத்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் நிலை தெரியவில்லை. சென்னையில் கைது செய்யப்பட்ட சிறார்களில் 74 பேருக்கு படிப்பறிவு என்பது கிடையாது.
சீர்திருத்தப்பள்ளி இருக்கா?
இதுபோல் தூத்துக்குடியில் 309 சிறார்கள், திருச்சியில் 120 பேர், கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, சேலம்,தேனி என இந்த மாவட்டங்களில் பிடிபட்ட சிறார்கள் யாரும் சீர்திருத்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாக அறிக்கை இல்லை.
முதல்முறையாக
இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலும் முதல் முறையாக தவறுசெய்து, போலீசிடம் சிக்கிக் கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது திருநெல்வேலியில் 454 பேர், தூத்துக்குடியில் 309 பேர், சென்னையில் 258 பேர், மதுரையில் 127 பேர், திருச்சியில் 120 பேர் என அனைவரும் முதல்முறையாக தவறு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை ஒன்றுபோல் இல்லை
இது குறித்த ஒரு தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சிறார்கள் குற்றங்களுக்கு தண்டனை என்பது ஒன்றுபோல இல்லை. சென்னையில் ஒரு சிறுவன் செல்போன்திருடினால், அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவான்.
இதுவே வேறு மாவட்டங்களில் நடந்தால், அவனை போலீசார் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.சிறார்கள் தவறுசெய்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நிலை குறைந்து, போலீசாரே விசாரித்து சட்டத்தை மீறி முடிவு எடுக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.” என்றார்.
நிலுவை வழக்குகள் ஏராளம்
மாவட்டந்தோறும் சிறார்கள் மீதான வழக்குள் ஏராளமாக நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலுவைக்கான காரணம்குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அவர்களிடம் முறையான விளக்கம் இல்லை. இதில் 2015-ல் வேலூரில் 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அனைத்தும் நிலுவையில் இருக்கிறது.
தூத்துக்குடியில் 327 வழக்குகளில் 5 வழக்குகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன,திருநெல்வேலயில் 240 வழக்குகளில் 222 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது, சென்னையில் 181 வழக்குகளும், விழுப்புரத்தில் 99 வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
தப்பி ஓட்டம்
இது மட்டுமல்லாமல் சீறார் சீர்திருத்த பள்ளிகளில் பாதுகாப்பின்மை, கவனிப்பின்மையால், கடந்த 2015ம் ஆண்டு சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் இருந்து மட்டும் 44 சிறார்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி
சிறார்கள் தவறுசெய்தால் திருத்துவதற்கு சட்டம் இருந்தும் ஏன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரிடம் கேட்டபோது, அவர்கூறுகையில் “ தவறுசெய்யும் சிறார்களை பிடிப்பதற்காக தனிப்பிரிவை போலீசார் அமைக்காதவரை, நாம் எந்த முன்னேற்றத்தையும் இதில் எதிர்பார்க்க முடியாது.
பெரும்பாலான இடங்களில் சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் உயர்நீதிமன்றங்கள் கண்காணிப்பில் வருவதில்லை.” என்றார்.
என்ன காரணம்
குடும்பத்தில் பெற்றோர்களின் சரியான வளர்க்காதது, பெற்றோர்கள் குழந்தை முன் சண்டையிடுவதால், ஏற்படும் விரக்தி, தாய், அல்லது தந்தை இருவரில் ஒருவர் மட்டும் வளர்க்கும் போது, முறையாக கண்காணிக்க முடியாமல் போதல் போன்ற உளவியல் காரணங்களால் சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், குடும்ப வறுமை, நண்பர்கள் சேர்க்கை, கல்வியறிவின்மை, அதிகமாக செலவுசெய்ய ஆசைப்படுவது உள்ளிட்ட சுற்றுபுற காரணிகளும் சிறார்களை குற்ற செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
ஆக்கப்பூர்வ இடமாக
இதற்கு சிறார் சட்டங்களை முறையாக பயன்படுத்துவது, சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை வதைக் கூடங்களாக நடத்தாமல், சிறுவர்கள் திருந்துவதற்கான ஒழுக்க நெறிகளை போதிக்கும் இடமாக, வாழ்க்கையின் அடுத்த நகர்த்தலுக்கு அவர்களை ஆக்கப்பூர்வமாக்க தயார்படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.