லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதல் - ஓட்டுநர்கள் இருவர் உடல் நசுங்கி பலி; 10 பேர் காயம்...

First Published Apr 10, 2018, 9:19 AM IST
Highlights
Lorry and van confrontation face-to-face - two drivers died 10 people heavy injured


ஈரோடு
 
ஈரோட்டில் லாரி மற்றும் வேன் பயங்கரமாக மோதிக்கொண்டதில் இரண்டு ஓட்டுநர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் பயணித்த பத்து பேர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரைச் சேர்ந்த தருமன் (30), சகுந்தலா (48), ராம்குமார் (19), ஆதிரா (27), தியா (5), ரேவதி (22), பிரிசில்லா (35) ஆகிய ஏழு பேர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு வேனில் சுற்றுலா சென்றனர். 

வேனின் ஒட்டுநர்களாக ஈரோட்டைச் சேர்ந்த பொன்னுசாமியும் (30), சிலேட்டர் நகரை சேர்ந்த சிவாவும் (30) இருந்தனர்.

சுற்றுலா முடிந்ததும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து மீண்டும் பெருந்துறைக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை பொன்னுசாமி ஓட்டினார். அவருக்கு அருகில் இன்னொரு ஓட்டுநரான சிவா இருந்தார். 

நேற்று காலை பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி –  சீனாபுரம் சாலையில் துலுக்கபாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. 

இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியது. அதனுடன் வேன் ஓட்டுநர்களான பொன்னுசாமி, சிவா ஆகியோர் உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும், இந்த விபத்தில் வேனில் வந்த ஏழு பேர், லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த உதயசூரியன் (56) மற்றும் அவருடன் வந்த ஜெகநாதன் (45), பன்னீர் செல்வம் (54) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். 

அங்கிருந்தவர்கள், உடனே படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உதயசூரியன், ஜெகநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம், உதவி ஆய்வாளர் ராம்பிரபு மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பொன்னுசாமி, சிவா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தினால் துடுப்பதி – சீனாபுரம் சாலையில் ஒரு மணி மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!