மக்களவைத் தேர்தல் 2024க்கான வேட்புமனுத்தாக்கல் தமிழ்நாட்டில் நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதி (இன்று) என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த சில தினங்களாகவே வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்து வந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், 23, 24 ஆகிய தேதிகளில் மனுத்தாக்கல் நடக்கவில்லை. மற்ற நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கான வேட்புமனுத்தாக்கல் தமிழ்நாட்டில் நிறைவு பெற்றுள்ளது. கடைசி நாளான இன்று பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக., பொதுச்செயலாளர் தினகரன், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
இன்று பிற்பகல் 3:00 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. பிற்பகல் 3:00 மணிக்குள், மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டு கதவுகள் மூடப்பட்டன. டோக்கன் பெற்றவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிற்பகல் 2 மணி நிலவரப்படி தமிழகத்தில் 856 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இறுதி விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும் போது, மொத்தமாக எத்தனை பேர் தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 28ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் வருகிற 30ஆம் தேதியாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.