விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதிஒ, திமுக கூட்டணியில் விசிக உள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விசிக போட்டியிட்டது. அதில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், அதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்து விட்டது. எனவே, மக்களவைத் தேர்தல் 2024இல் விசிக வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
முன்னதாக, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்கவும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என தெரிவித்த தேர்தல் ஆணையம், ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், 2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதாக சுட்டிக்காட்டியதுடன், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது என கூறி, திமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை முடித்து வைத்தது.