மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20ஆம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. எனவே, கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
திமுக, அதிமுக, பாஜக: தேனியில் யாருக்கு சீட்?
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை சீட் குறித்து பின்னர் பேசிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருச்சி, விருதுநகர் ஆகிய இரண்டில் ஒரு தொகுதியை மதிமுக கேட்டு வந்த நிலையில், மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளர் தேர்வுக்கான கூட்டம் மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, அதில், மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட மதிமுக ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது.
அதன் தொடர்ச்சியாக, திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அவரது தந்தையும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ வெளியிட்டார். தொடர்ந்து பேசிய வைகோ, “பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்றார்.