மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூர் தொகுதி - கள நிலவரம் என்ன?

By Manikanda Prabu  |  First Published Mar 22, 2024, 7:03 PM IST

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
 


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பல ஆயிரம் கோடி பின்னலாடை வர்த்தகத்தில் ஈடுபடும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், பாஜக வேட்பாளராக, ஏ.பி.முருகானந்தம், அதிமுக வேட்பாளாரக அருணாச்சலம் அகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

திருப்பூர் மக்களவை தொகுதியில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய 3 தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், எஞ்சிய 4 தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் வருகின்றன. இதனால், வெற்றி வாய்ப்புக்கான வேட்பாளர் பெரும்பாலும் ஈரோடு மாவட்ட மக்களை சார்ந்து இருக்க வேண்டியதிருக்கும்.

1951 மக்களவைத் தேர்தலின் போது திருப்பூர் மக்களவைத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி, பின்னர் கோபிச்செட்டிபாளையம் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பிறகு, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், 2009ஆம் ஆண்டில் மீண்டும் திருப்பூர் தொகுதியாக உருவானது.

2009ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மக்களவை தொகுதியில் இதுவரை இரண்டு முறை அதிமுகவும், ஒரு முறை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுகவை சேர்ந்த சிவசாமி, சத்தியபாமா ஆகியோரும், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.சுப்பராயனும் வெற்றி பெற்றுள்ளனர். சிட்டிங் எம்.பி.யான சுப்பராயன் தான் தற்போதும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் சிட்டிங்க் எம்.பி. மீண்டும் களமிறங்குவதால் சாதக, பாதகங்கள் உள்ளன. திருப்பூர் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்டநாட்களாகவே நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இருப்பினும், தொழிலாளர்கள் அதிகமான இருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன், கோபிச்செட்டிபாளையம் தொகுதியாக இருந்தது முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு இங்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. 2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து நின்று 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருமளவில் திருப்பூர் தொகுதிக்குள் வருகிறது. ஈரோடு தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கு உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் உள்ளதும், கொங்கு பெல்ட்டில் திமுக வளர்ந்து வருவதும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Lok Sabha elections 2024: நீலகிரி தொகுதியில் கள நிலவரம் எப்படி? அதிமுக - திமுக நேரடி போட்டி!

பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தம். இவர், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவர். கொங்கு மண்டலம் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதி என்பதால் இம்முறை கண்டிப்பாக சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள் பாஜகவினர்.

அதிமுக சார்பில் வேட்பாளராக அருணாச்சலம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான இவர், பெருந்துறை பேரூராட்சியின் 4ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால், இரட்டை இலையே போதும் எங்களது வெற்றிக்கு என ரத்தத்தின் ரத்தங்கள் மார்த்தட்டுகிறார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 45.60 சதவீத வாக்குகளை பெற்று 5,08,725 லட்சம் வாக்குகள் வாங்கினார். இரண்டாமிடம் பிடித்த அதிமுக வேட்பாளர் 37.23 சதவீத வாக்குகள் பெற்று 4,15,357 லட்சம் வாக்குகள் வாங்கினார். அதேசமயம், 2009 தேர்தலில் பாஜக தனித்து களம் கண்டபோது அக்கட்சி 1.55 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

click me!