மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை எழுதும் மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளாரக டாக்டர். சரவணன், பாஜக வேட்பாளராக பேராசிரியர் சீனிவாசன் அகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
undefined
மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தியத் தொகுதி, மேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை 1952 முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில்களில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் (காங்கிரஸில் இருந்து ஜி.கே.மூப்பனார் பிரிந்த போது மட்டும்), திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் 44.20 சதவீத வாக்குகள் பெற்று 4,47,075 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் 30.42 சதவீத வாக்குகள் பெற்று 3,07,680 லட்சம் வாக்குகள் பெற்றார்.
திமுக கூட்டணியில் சிட்டிங் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கே இந்த முறையும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரவணனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்தவரை, முக்குலத்தோர், யாதவர்கள், நாயக்கர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன. அதேபோல், மதுரை நகருக்குள் சவுராஷ்ட்ரா சமூக வாக்குகளும் கணிசமாக உள்ளது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் எம்.பி. மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க பூங்கா, ரயில் திட்டங்கள், மாணவர்களுக்கு கல்விக்கடன் என ஏராளமாக செய்துள்ளார். ஆனால், மதுரை நகருக்குள் உட்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளதாக அதிருப்தி நிலவுகிறது. குண்டும் குழியுமான சாலைகள், புழுதி என மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், புறநகர் பகுதிகளில் சிட்டிங் எம்.பி. சு.வெங்கடேசன் மீது அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. அதேசமயம், எளிமையான அணுகுமுறை, நாடு முழுவதும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது போன்றவை அவருக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது.
இயல்பாகவே, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் பரவலாக காணப்படுகிறது. மதுரையில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. சு.வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சமூகத்தின் வாக்குகள் போன்றவை அவருக்கு கூடுதல் பலம்.
மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூர் தொகுதி - கள நிலவரம் என்ன?
பாஜகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சீனிவாசன், களத்தில் இறங்கி வேலை பார்க்கக்கூடியவர் அல்ல என பாஜகவினரே கூறுகின்றனர். அத்துடன், பாஜகவில் பெரிதாக செலவும் செய்யப்படுவதில்லை. கட்சிக்காரர்களை தவிர, சு.வெங்கடேசன் போன்றோ அதிமுக வேட்பாளர் சரவணன் போண்றோ மக்கள் மத்தியில் அறிமுகமானவர் கிடையாது. பெரிதாக மெனக்கெடாமல் இருக்கும் செயல்பாடுகள் அவருக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது. அவரது சமூக வாக்குகளும் பெரிதாக மதுரையில் கிடையாது. அதேசமயம், க்ளீன் இமேஜ் அவருக்கான ப்ளஸாக பார்க்கப்படுகிறது. கொஞ்சம் இறங்கி வந்து வேலை பார்க்க வேண்டும் என்பது பாஜகவினரின் எண்ணமாக இருக்கிறது.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் மதுரை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை செய்துள்ளார். தாராளமாக செலவு செய்யக் கூடியவர். அவரது சமூக வாக்குகள் மதுரையில் கணிசமாக உள்ளது, இரட்டை இலை சின்னம் போன்றவை அவருக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ராஜன் செல்லப்பா தனது மகனுக்கு சீட் வாங்காததும் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், சர்வ கட்சி சரவணன் என்ற பெயரும் அதிமுக வேட்பாளருக்கு உள்ளதால், கட்சியினரின் ஒத்துழைப்பு எந்த அளவிற்கு அவருக்கு இருக்கும் என தெரியவில்லை. இதெல்லாம் சரவணனுக்கு மைனஸ். ஒட்டுமொத்தமாக மதுரை மக்களவைத் தொகுதிக்கான போட்டி அதிமுக vs கம்யூனிஸ்ட் என்றாகத்தான் இருக்கப் போகிறது என்கிறார்கள்.