கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மக்களவைத் தேர்தல் 2024இல் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் செய்ய 27ஆம் தேதி (இன்று) கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் 36 இலட்சத்து 4100 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.1.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. அவரது மனைவி அகிலாவின் பெயரில் அசையும் சொத்து 36 இலட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 இலட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 இலட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 53 இலட்ச ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கியில் 25 இலட்சத்து 30 ஆயிரத்து 492 ரூபாய் உள்ளது. கனரா வங்கியில் 2608 ரூபாய் உள்ளது. கையில் ரொக்கமாக 5 இலட்ச ரூபாய் பணம் உள்ளது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது மனைவி அகிலாவிடம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னிடம் 5 இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் உள்ளதாகவும் அண்ணாமலை தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அளித்த பிரமாண பத்திரத்தில் தன் மீது 24 வழக்குகள் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார். அந்த தேர்தலின்போது, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய பெயரில் ரூ.46,13,849 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், தனது மனைவியின் பெயரில் ரூ.94,73,348 அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். மேலும், அசையா சொத்துக்களாக பூர்வீகமாக உள்ள 76 ஏக்கர் நிலம் உட்பட பல நிலங்களையும் பட்டியலிட்டிருந்தார்.
இதனிடையே, கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அவரது தந்தையின் எம்.எல்.ஏ. கோட்டாவில் சீட் வாங்கி படித்ததாக விமர்சித்த கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை, தன்னுடைய தந்தையுடன் 2 தகர டப்பாவை எடுத்துக் கொண்டு 3 பேருந்து மாறி 2002இல் கோவைக்கு படிக்க வந்ததாக கூறினார். ஆனால், தற்போது அவரது சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது.
இந்த தேர்தலில் மட்டுமல்ல கடந்த 2021 தேர்தலில் கூட, பூர்வீகமாக 76 ஏக்கர் நிலம் இருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏக்கர் நிலம் இருந்தும் கூட, தன்னை ஒரு ஏழை போல் சித்தரித்து தகர டப்பாவுடன் கோவைக்கு வந்ததாக அண்ணாமலை கூறியதை பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.