உள்ளாட்சித் தேர்தல் வழக்கு; ஐகோர்ட் எச்சரிக்கை...மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

First Published Jul 31, 2018, 11:57 AM IST
Highlights
Local election case State Election Commission ordered


உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது நீதிமன்ற அவமதிப்பு குற்றம்தான் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தல் நடத்துமாறு கடந்த ஆண்டே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நடத்தவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்று வருடம் மே 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. 

ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் ஆணைபிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடைபெறாததை கண்டித்து திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. 

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

click me!