
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பச்சிளம் குழந்தைகளை பட்டினிப்போட்டு ஆந்திராவை சேர்ந்த பெண்கள், பிச்சை கேட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களிடம் உள்ள குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தர்மபுரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள், பேருந்து நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில், கடந்த சில நாள்களாக, ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் சிலர், பச்சிளம் குழந்தைகளை காட்டி, பிச்சை எடுத்து வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக அதிகாலை நேரங்களில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தைகளுடன், குடியிருப்பு பகுதிகளிலுக்கு வரும் இந்த கும்பல், குழந்தைகளின் உடல் நலத்தின் மீது அக்கறையின்றி, பணம் பெறுவதிலேயே குறியாக உள்ளனர்.
யாராவது பணம் தராவிட்டால், தாங்கள் வைத்துள்ள குழந்தையை கிள்ளி விட்டு, அது அழுவதன் மூலம் அனுதாபத்தை ஏற்படுத்தி பிச்சை எடுக்கின்றனர். மேலும், குழந்தைகள் அழ வேண்டும் என்பதற்காக, அதற்கு பால் தராமல், பசியோடு எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்களிடம் கேட்டபோது, “கொட்டும் பனியிலும் பச்சிளம் குழந்தைகளை வைத்து ஆந்திராவைச் சேர்ந்த இந்த கும்பல் பிச்சை எடுத்து வருகின்றனர். குழந்தைகளை அழவைத்து, அனுதாபத்தின் மூலம் பணம் பெறுகின்றனர். இந்த கும்பல் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ் கூறியதாவது: “தர்மபுரி நகரில் பச்சிளம் குழந்தைகளுடன் வந்து பிச்சை பெறுவோர் குறித்து, 1077 மற்றும் சைல்டு லைன் எண், 1098-க்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.
இதன் மூலம், குழந்தைகளுடன் வந்து பிச்சை பெறுவோரின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். அவர்களின் சொந்த குழந்தையாக இல்லாமல் இருந்தால், விசாரித்து, அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடத்தல் குழந்தையாக இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.