குழந்தைகளுக்கு விசம் கொடுத்துவிட்டு, பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை…

First Published Dec 15, 2016, 10:50 AM IST
Highlights


தர்மபுரி

தர்மபுரி அருகே, குடும்ப தகராறு காரணமாக, இரு குழந்தைகளுக்கு விசம் கொடுத்துவிட்டு, பெற்றோர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நான்கு பேரும் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகராஜ் (42). பெயிண்டர். இவருடைய மனைவி நதியா (27). இவர்களுக்கு ஆதீஸ்வர் (9), என்ற மகனும், சவிதா (5) என்ற மகளும் இருந்தனர்.

தர்மபுரி அருகே உள்ள அமலா பள்ளியில் ஆதீஸ்வர், ஐந்தாம் வகுப்பும், சவிதா, ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று காலை முதல் இவர்களது வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து, நாகராஜின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் அப்பகுதியினர், வீட்டின் கதவை உடைத்து திறந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, இரு குழந்தைகளும், இரத்தம் கக்கியபடி இறந்து கிடந்தனர். நாகராஜ், நதியா, ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தர்மபுரி நகர காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே விரைந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி., பண்டிகங்காதர் மற்றும் காவலாளர்கள் நேரில் வந்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக, குழந்தைகளுக்கு விசம் கொடுத்து கொன்று விட்டு, தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!