
கொடைக்கானல் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் இருவரையும் மண் வெட்டியால் தாக்கிய மூவர் தலைமறைவாயினர். காவலாளர்கள் அவர்கள் மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான போலூர் பூதலிங்ககோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை தங்கவேலு, இவரது மகன் பிரபு ஆகியோர் தங்கள் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, இவர்களுக்கும், மோகன் அவரது தம்பி கணேசன், உறவினர் கோபால் ஆகிய மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் தங்கவேலுவையும் பிரபுவையும் அவர்கள் 3 பேரும் மண்வெட்டியால் தாக்கிவிட்டு அந்த மூவரும் தலைமறைவாயினர்.
இந்த தாக்குதலால் இருவரும் பலத்த காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, கொடைக்கானல் காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். பின்னர், தலைமறைவான மோகன், கணேசன், கோபால் ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.