
1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மார்ச் 8-ஆம் நாள் அங்கு மகளிர் உரிமைகள் காத்திடும் நோக்கில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1975-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 8-ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளும் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றன. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் மகளிர் தினத்தை மகளிர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாடுகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகளிர் உரிமைகளைக் காப்பதற்காக முதன்முதலில் 1921-இல் நீதிக்கட்சி அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தபொழுதெல்லாம் மகளிர்க்குக் காவல்துறையில் பணிகள், சொத்துரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கும் மகளிர் திட்டம் முதலியவற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முதலில் 33% என்றும், பின்னர் 50% என்றும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு பெண்கள் சமூக, பொருளாதார நிலைகளில் விடுதலை பெற்று வளம்பெறத் தொடங்கினர்.
திராவிட நாயகர் ஆட்சியில்
தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் பெண்கள் சமுதாயம் மேலும் மேலும் முன்னேறுவதற்கான பல புரட்சிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் வழிகாட்டி வருகிறார்கள். அரசுப் பேருந்துகளில் மகளிர், மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், 1 கோடியே 15 இலட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் 3 இலட்சத்து 28 ஆயிரம் மகளிர்க்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், திருவண்ணாமலை, பரங்கிமலை, சேலம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பான தோழி விடுதிகள் திட்டம் உட்பட மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் சமூகநீதி, சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை” 2024-ஐ முதலமைச்சர் அவர்கள் புதிதாக உருவாக்கி கடந்த 21.2.2024 அன்று வெளியிட்டார்கள்.
திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை
பல்வேறு மகளிர் திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ், இதுவரை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கியுள்ளார்கள். இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்தார்கள். 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றனர்.
மகளிர் இடஒதுக்கீடு 40 சதவீதம்
அரசுப் பணிகளில் மகளிர்க்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தி மகளிர் பலர் அரசு அலுவலகங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
மகப்பேறு விடுப்பு உயர்வு
அரசுப் பணிகள் புரியும் மகளிர்க்கான மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ஆம் ஆண்டு முதல் உயர்த்தியுள்ளார்கள்.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பை உயர்த்தியுள்ள முதல்வர்
மாண்புமிகு திராவிட நாயகர் அவர்களின் ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.12 இலட்சம் என்பது ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,25,167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் திராவிட நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
கைம்பெண்களுக்காகக் குறைந்த வட்டியில் கடன்
கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நலனில் அக்கறை கொண்டு 13,003 மகளிர்க்கு 5 சதவீத வட்டியில் ரூ.35.35 கோடி கடன் வழங்கியுள்ளார்கள்.
தொழில் முனைவோராக மகளிர்
பெண்களைத் தொழில் முனைவோராக்கிடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் TANSEED (Tamil Nadu Startup Seed Grand Fund) திட்டம் வாயிலாக புத்தொழிலை ஊக்குவித்திட பெண் தொழில் முனைவோரின் புத்தொழில்களுக்கு 15 இலட்சம் ரூபாய் வரை மானிய நிதி வழங்குகிறார்கள்.
பணிபுரியும் – மகளிர் தொழில் முனைவோர்க்குக் கடன்
சமூக நீதியின் தாயகமான தமிழ்நாட்டில் சமூக நீதியை மேம்படுத்திடும் நோக்கில் 11,906 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.331.13 கோடியும், 32,338 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.191.23 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
39 புதிய மகளிர் காவல் நிலையங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண் காவலர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் (AVAL - Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.
மகளிர்க்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது –கலைஞர் எழுதுகோல் விருது
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு மகளிர்க்கான கலைஞர் கலைத்துறை வித்தகர் சிறப்பு விருது பழம்பெரும் திரையுலகப் பின்னணிப் பாடகி திருமதி.பி.சுசீலா அவர்களுக்கும், அதேபோல, சிறந்த மகளிர் பத்திரிகையாளர் சுகிர்தா சாரங்கராஜ் அவர்களுக்குச் சிறப்பு விருதாக கலைஞர் எழுதுகோல் விருதும் வழங்கப்பட்டுள்ளன.
அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள்
திருக்கோவில்களில் 11 பேர் பெண் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டு மகளிர் சமுதாயம் போற்றப்பட்டுள்ளது.
சிப்காட் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்
தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மனக் கவலை தீர்க்கும் மாமருந்தாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்கியுள்ளது. இந்த 17 தொழிற் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 இலட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் இத்தகைய புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி, தொடர்ந்து பல்வேறு வகையிலும் மகளிர்க்கான சலுகைகளை வழங்கி வருவதால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றன.