எனக்கே பட்டா இல்லை..! உங்களுக்காக மருத்துவ முகாம் நடத்துறோம் - நன்றி சொன்ன இராணுவம்

By Thanalakshmi VFirst Published Dec 13, 2021, 8:43 PM IST
Highlights

தங்களுக்கு உதவியாக வீட்டுமனை பட்டா பெற்று தர கேட்ட மக்களிடம் எனக்கே பட்டா இல்லை என்ற லெப்டினட் ஜெனரல் அருணின் பதிலால் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் கலகலப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று இராணுவம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டிணன்ட் ஜெனரல் அருண் இன்று ஆய்வு செய்தார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு ராணுவம் சார்பில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

பின்னர் அப்பகுதி மக்களுக்கு ராணுவம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் கம்பளிகளை வழங்கினார். மேலும் மிகவும் இக்கட்டான தருணத்தில் நஞ்சப்ப சத்திரம் மக்களின் உதவியை ராணுவம் மறக்காது. உங்களுக்கு ராணுவம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உதவி, நாட்டைக் காக்கும் எங்களுக்கு ஊக்கமும், தைரியத்தையும் அளிக்கிறது என்று பேசினார்.இந்த உதவிக்கு ராணுவம் சார்பில் உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், உங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்து, உங்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள். மருந்துகள் அளிக்கவும் பரிசீலிக்கப்படும் என்றார்.

மேலும் அப்பகுதி மக்கள், தடுப்புச் சுவர், தண்ணீர் வசதி, பட்டா ஆகியவை வழங்க உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டனர். எனக்கே பட்டா இல்லை. பட்டா வேண்டுமென்றால், நானும் வருவாய்த் துறையைத்தான் நாட வேண்டும். பட்டா உட்பட பிரச்சினைகள் குறித்து வருவாய்த் துறையிடம் முறையிட வேண்டும் என்றார். இதைக் கேட்டதும் அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது. இதனால் இறுக்கமான சூழல் மறைந்து, கலகலப்பாக மாறியது.மேலும் ராணுவம் சார்பில் குழந்தைகளின் நலனுக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். பின்னர், விபத்து குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமாருக்கு தலா ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

முன்னதாக இந்த விபத்தின்போது மீட்புப்பணியில் உடனடியாகவும், நீடித்த அளவிலும் உதவிகளை அளித்ததற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. துயரகரமான ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப்பணிகளிலும், காயம்பட்டவர்களை காப்பாற்றும் பணிகளிலும் உதவியதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், காட்டேரி கிராம மக்களுக்கும் விமானப்படை நன்றி தெரிவித்தது குறிப்பிடதக்கது.

click me!