
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெருநாய் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் மற்றொரு தரப்போ, தெருநாய்களை சுதந்திரமாக உலவ விட வேண்டும். தெருநாய்களை சீண்டினால் தான் கடிக்கும். சாதாரணமாக கடந்து சென்றால் ஒன்றும் செய்யாது என்று கூறி வருகின்றனர்.
இதுபோன்ற விவாதங்கள் நடந்து வரும் வேளையில் கடந்த மாதம் மேயர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 24ம் தேதிக்குள் நாய், பூனை வளர்ப்பதற்கு லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்து லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர். அதேபோல் வீட்டில் வளர்க்கும் நாய்களை பொது இடங்களான பூங்கா, சாலைகளுக்கு அழைத்து வரும்பபோது அதன் கழுத்தில் பட்டை அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது நாய்கள் அசுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது. மீறி நாய்கள் அசுத்தம் செய்தால் அதனை அகற்ற வேண்டிய பெறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு உள்ளது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வீட்டில்நாய் வளப்பவர்கள் கட்டாயம் லைசன்ஸ் வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ ‘தமிழ்நாடு முழுவதும் ஏதோ ஒரு தெருவில் உள்ளவர்களை எல்லாம் நாய் கடித்தது போல பதற்றத்தை உருவாக்கக் கூடாது. சில இடங்களில் நாய்க்கடி இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிறது. நாயை தொல்லை பண்ண கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது நாம் என்ன செய்கிறோம் என்றால் தடுப்பூசி மட்டும்தான் போடுகிறோம். உயிர்வதை கூடாது என்கிறார்கள்.
முதல்வர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர், நான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என எல்லா அமைச்சர்களும், எல்லாத் துறை செயலாளர்களும் சந்தித்து தெருவில் திரிகிற நாய்களுக்கு என்ன மாற்று? என்று ஆலோசித்து இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை எடுத்து வந்துள்ளோம். உச்சநீதிமன்றத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டால் சுத்தமாக எந்த நாயும் தெருக்களில் இருக்காது. அது மட்டுமல்ல இப்போது வீட்டில் வளர்க்கிற செல்லப் பிராணியாக நாய் இருப்பதால் அதற்கு லைசன்ஸ் கொடுக்கிற திட்டத்தை இப்போது தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம் .
பொது மக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் நாய் வளர்ப்பதை யாரும் குறை சொல்லவில்லை. வீட்டில் நாய் வளர்க்கிற அத்தனை பேருமே லைசன்ஸ் வாங்கி, முறையாக வீட்டிற்குள் மட்டும் வளத்தீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்த்தீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்