
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனி என்றாலே நாவைச் சுண்டி இழுக்கும் பஞ்சாமிர்தம் தான் தனிச் சிறப்பு. பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்படும் இந்தத் தனித்துவமான பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடும் (Geographical Indication - GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், ஊருக்குத் திரும்பும்போது கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த விற்பனைக்காக, அடிவாரம் மற்றும் கிரிவீதிகளில் பல்வேறு பஞ்சாமிர்த 'ஸ்டால்கள்' அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கார்த்திகை மாத சீசன் தொடங்கியுள்ளதால், சபரிமலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் முருகப்பெருமானை வழிபட பழனிக்கு வருகின்றனர். இதன் காரணமாக, பழனி முருகன் கோவில் மற்றும் அடிவாரம் கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பழனி வரும் ஐயப்ப பக்தர்கள் கோவிலின் பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
பக்தர்களின் இந்த வருகையால், பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் சுமார் 80 டன் (80 ஆயிரம் கிலோ) பஞ்சாமிர்தம் விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஒரு நாளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி 1 லட்சத்து 98 ஆயிரத்து 480 டப்பாக்கள் விற்பனையானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 டப்பாக்கள் (80 ஆயிரம் கிலோ) விற்பனையாகி உள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இன்றி பஞ்சாமிர்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதன் தயாரிப்புப் பணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நடந்து வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.