மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி திமுகவினர் மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவுநாளை மத நல்லினக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “மதநல்லிணக்கத்தின் அடையாளமான மகாத்மா காந்தி மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. அதனால், ஜனவரி 30ஆம் நாளன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைவரும் மதநல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.
அதன்படி, காத்மா காந்தியின் 77ஆவது நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக அலுவலகமான அறிஞர் அண்ணா அறிவாலயத்தில், திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயினுக்குச் சென்றுவிட்டதால், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் இந்த நிகழ்வு நடைபெற்றது. மத நல்லிணக்க உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.
பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
“மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம்; மக்களை பிளவுபடுத்தும் சாதி, மத எண்ணங்களை விலக்கி அனைத்து மக்களையும் ஒன்றென நினைத்து அரவணைத்து செல்வோம்; வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்; மதவெறி சக்திகளை வேரறுப்போம்; பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம்; வகுப்புவாத இந்தியா வேண்டாம்; அமைதியான இந்தியா வேண்டும்; சமூக நீதி சமுதாயம் அமைப்போம்” என உறுதிமொழி எடுக்கப்பட்டது.