
ஈரோடு
ஈரோட்டில் தனியார் சொன்னதால் சாலையை தாழ்வுப்படுத்த வந்த அதிகாரிகளை, தனியார் ஒருவரின் கருத்துக்காக சாலையைத் தாழ்வுபடுத்தக் கூடாது. பொக்லைன் எந்திரத்தை திருப்பி எடுத்துச் செல்லுங்கள் என்று மக்கள் ஆணையிட்டனர்.
ஈரோடு மாநகராட்சி 31–வது வார்டுக்கு உள்பட்டது திண்டல் செல்வம்நகர். இந்தப் பகுதியின் முதலாம் வீதியில் சாலை போடும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புத் தொடங்கியது.
அப்போது சல்லி, மண் கொட்டப்பட்டு சாலை உயர்த்தப்பட்டதால் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாலை உயர்த்தப்பட்டால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டுக்கு வந்துவிடும் எனவே சாலையை தாழ்வுபடுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இந்நிலையில் திண்டல் செல்வம் நகர் பகுதியில் சாலையை தாழ்வுபடுத்தும் பணிக்காக ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு ஒன்று கூடி பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வீரப்பன்சத்திரம் காவலாளர்கள் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள்.
அப்போது மக்கள் கூறியது: ‘தனியார் ஒருவரின் கருத்துக்காக சாலையைத் தாழ்வுபடுத்தக் கூடாது. எனவே, பொக்லைன் எந்திரத்தை திருப்பி எடுத்துச் சென்றுவிடுங்கள். மேலும் தார்ரோடு போட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று சாலையை தாழ்வுபடுத்தும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.