
வங்கிக் கணக்கில் உரிய ஓய்வூதியத் தொகை வந்தால் மட்டுமே நம்ப முடியும் என்று தெரிவித்து 8-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள்.
“நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்,
மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதில் தாமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஒன்பது மண்டல அலுவலகங்கள் முன்பும் தொடர்ந்து எட்டாவது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகம் முன் கடந்த 16-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மார்ச் 28-ஆம் தேதிக்குள், ஓய்வூதிய நிலுவை வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்து, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.
இருப்பினும், தங்களது வங்கிக் கணக்கில் உரிய ஓய்வூதியத் தொகை வந்தால் மட்டுமே நம்ப முடியும் என்று தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில், 8-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் கிளைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் தலைவர் சம்பந்தம், வேலூர் தலைவர் கோவிந்தசாமி, திருவண்ணாமலை தலைவர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.