
காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்றாலும், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றுத் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியாலும், கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே ஆரம்பித்து விட்டதாலும் தண்ணீரின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கர்நாடகா அரசும், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது ஒருபக்கம் இருக்க, காவிரி ஆற்றின் நீர்ப்படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது.
இந்த செயலைப் பார்க்கும்போது, மீண்டும் தமிழகத்தை வஞ்சிக்கும் முனைப்பில் மத்திய அரசு செயல்படுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
விவசாயிகள் இறப்பதை பற்றி கவலைப்படாத மத்திய அரசு, விவசாயிகள் மாரடைப்ப்பால் இறந்தனர் என்று பேசும் தமிழக அரசும் விவசாயிகளை சேர்ந்தே கைவிட்டது.
டெல்லி சாலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கவில்லை.
இப்படி பல்வேறு பிரச்சனைகளை தமிழக விவசாயிகள் சந்தித்து வருகின்ற சூழ்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் செரிவூட்டுதல் தேவைக்காக தென்பெண்ணை ஆற்றில் இருந்து நேற்று விநாடிக்கு 306.72 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், தென்பெண்ணை ஆற்றோரம் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இந்த தண்ணீர் விவசாயிகள் மற்றும் மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும், ஓரளவேனும் பூர்த்தி செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.