
அடிப்படை திறன்களை கட்டாயம் பெறும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இதில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன், கல்வியறிவு உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கேட்டு அறிந்தார்.
அதன்பின்னர் அவர் பேசியது:
“அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6–ஆம் வகுப்பு முதல் 8–ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படிக்க பயிற்சி அளிப்பது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கடமை.
தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சரளமாக வாசிக்க, பேச, எழுதவும் கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை திறன்களை கட்டாயம் பெறும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
போதிய அடிப்படை திறன் இல்லாமல் வயது அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கக் கூடாது. எனவே கோடை விடுமுறையில் பயிற்சி அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் வரும்போது தமிழ், ஆங்கிலம் பாடங்களில் சரளமாக வாசிக்க, பேச ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான, ஒரு மாதத்திற்கான செயல் திட்டம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர், திருவண்ணாமலை, செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.