
அரியலூர்
மாணவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியதைக் கண்டித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அக்கல்லூரி முதல்வர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
வேலூரில் மாணவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியதைக் கண்டித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் ஓட்டேரியில் அண்மையில் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தினர்.
இதனைக் கண்டித்தும், மதுரையில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் அரியலூர் வட்டாட்சியரகம் முன் நேற்று போராட்டம் நடத்தப் போவதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவலாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.
மேலும, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரி வளாகத்திலே கைது செய்ய காவல் வாகனங்களையும் கொண்டுவந்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
அதனையடுத்து, 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்களின் போராட்டத்தையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் (பொ) சிற்றரசு உத்தரவிட்டார்.