யாருக்காக ஆட்சி நடத்துறீங்க முதல்வரே! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதுங்க! ஸ்டாலினுக்கு எதிராக சரமாரியாக வெடிக்கும் TTV!

Published : Aug 06, 2025, 12:29 PM IST
ttv dhinakaran

சுருக்கம்

தமிழகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படுகொலைகள் நடந்திருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தன் துறையைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளரைப் பாதுகாக்க முடியாத முதலமைச்சரால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படுகொலை

இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் மாந்தோப்பு காவலாளி படுகொலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை எனக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்?

சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

எனவே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்