
விலை உயர்ந்த லேட்டஸ்ட் மாடல் சொகுசு கார்களை பார்க்க விரும்புவோர், அந்தந்த ஷோ ரூம்களுக்கு போகவேண்டிய அவசியம் இல்லை. ஆர்.கே. நகருக்கு வந்தாலே போதும்.
அந்த அளவுக்கு, ஆர்.கே.நகரின் அனைத்து பகுதிகளிலும் லேட்டஸ்ட் மாடல் சொகுசு கார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
எல்லா கார்களிலும், பெரும்பாலும் அதிமுக கரை வெட்டி கட்டிய ஆட்களே அமர்ந்து இருக்கிறார்கள்.
அவர்கள் சட்டைப்பையில் உள்ள படத்தை பார்த்துதான், தினகரன் அணியா? ஓ.பி.எஸ் அணியா? என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அவ்வாறு சொகுசு கார்களில் வருபவர்கள் அனைவரது கைகளிலும், அந்தந்த பகுதி வாக்காளர் பட்டியலும், ஒரு நோட்டும் தவறாமல் இடம் பெற்றுள்ளது.
யார் யாருக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொள்ளவும், யார் யாருக்கு என்னென்ன கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை குறைத்துக்கொள்ள அந்த நோட்டு பயன்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் நம்மை கவனிக்கதான் வருகிறார்கள் என்ற உற்சாகத்தில், வாக்காளர்களும் அவர்களுக்கு எந்த இடையூறும் கொடுப்பதில்லை.
மாறாக, தங்கள் வீட்டின் அருகிலேயே கார்களை நிறுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றனர். ஏனெனில் கார் பார்க்கிங் செய்து கொள்ளவும் தனியாக சில்லறை வழங்கப்படுவதுதான்.
காவிரி பிரச்சினை, விவசாயிகள் போராட்டம், 2015 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதம், வரதா புயல் போன்ற காலங்களில் எல்லாம் கூட இப்படி யாரும் நமக்கு வாரி வழங்கவில்லையே, என்று தொகுதி மக்கள் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.
ஆனாலும், இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டும்தான், இந்த கவனிப்பு என்று நினைக்கும்போது, மனது கொஞ்சம் பேதலிக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும், எரிகிற வீட்டில் இழுத்த வரை லாபம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.