
திருநெல்வேலி
மாணவர்கள் மறுமதிப்பீடு செய்யக் கோரும்போது, “விடைத்தாள் திருத்தப்பட்டு இருப்பதில் தவறுக்கு வாய்ப்பில்லாதவாறு” திருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன் அறிவுரை வழங்கினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி கல்வி மாவட்டத்திற்கு பாளையங்கோட்டையில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்திற்கு பாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் பள்ளியும், தென்காசி கல்வி மாவட்டத்திற்கு தென்காசி ஐபிஐ பள்ளியும் விடைத்தாள் திருத்தும் மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த நிலையில், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டை பெல் பள்ளியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியது:
“விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் மறுமதிப்பீடு செய்யக் கோரும்போது விடைத்தாள் திருத்தப்பட்டு இருப்பதில் தவறுக்கு வாய்ப்பில்லாதவாறு பணியைச் செவ்வனே செய்திருக்க வேண்டும்.
முன்பு நாளொன்றுக்கு 24 விடைத்தாளைத் திருத்த வேண்டியிருந்தது. இப்போது, 20 விடைத்தாளைத் திருத்தினாலே போதுமானது.
இம்மாதம் 24-க்குள் பணியை முடிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இம்மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்களுக்கும் சேர்த்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஆயிரத்து 500 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
மேலும், 11 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்கல்வி பாடப் பிரிவுகளுக்கான விடைத்தாள்களும் இம்மாவட்டத்தில் உள்ள மூன்று மையங்களில் திருத்தப்படுகின்றன. இதற்காக மையங்களுக்கு போதிய காவல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.