
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையின் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி டெல்லியில் தற்பொது ஆலோசனை நடத்தி வருகிறார்
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி,டி,வி,தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதில் தமிழக அமைச்சர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் வார்டு வாரியாக எவ்வளவு பணம் விநியோகம் செய்தார்கள் என்பது போன்ற விவரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன,
இந்த ஆவணங்கள் நேற்று மாலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று, தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் பணம்வழங்குவதற்காக டோக்கன் வழங்கி உள்ளதாகவும் , தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப் பட்டுள்ள, தனிதேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்துவதற்காக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதே நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஓட்டுக்குபணம் கொடுத்ததற்கான, ஆதாரங்கள் சிக்கி உள்ளது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி
இன்று காலை, விமானம் மூலம் டெல்லி சென்றார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் துணை தேர்தல் ஆணையத் உமேஷ் சின்ஹா தலைமையில் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா மற்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் பங்சேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.