
ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
அந்த வீடுகளை வரும் 9-ம் தேதி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தருவதாக இருந்தது. இதற்கு தலைமை தாங்க ரஜினிகாந்திற்கு லைக்கா நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் இலங்கை செல்ல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். அதனால் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு கேள்வி எழுப்பி லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ரஜினி இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதுவரை ஈழ மக்களுக்கு செய்த நன்மை என்ன என கேள்வி எழுப்பியது.
மேலும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் ஈழ மக்களின் எதிர்காலத்திற்கு செய்த நன்மைகளை பட்டியலிட முடியுமா என்றும் லைக்காவின் போட்டி நிறுவனங்களிடம் அந்த அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெற்று வருவதாகவும் சாடியது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், கடந்த 25-ம் தேதி, நியூஸ் 18 சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன், ராஜபக்சேவிற்கும் லைக்காவிற்கும் தொடர்பிருப்பதாக கூறியதாகவும் ஆனால், அப்படி எந்த சம்பந்தமும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் தங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், தனது பேச்சிற்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டு, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.