
சென்னையில் குடிபோதையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில், தனது இரண்டாவது கணவருக்குப் பிறந்த குழந்தையை காலால் கழுத்தில் மிதித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை செனாய்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 22 வயதான பிரியங்கா. . இவர் தனது 14-வது வயதிலேயே வேலு என்ற பெயிண்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் வேலு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தனியாக வாழ்ந்து வந்த பிரியங்கா அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரோடு குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஸ்ரீமதி , புஷ்பம் என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவரது 2-வது கணவர் தினேஷ்குமாரும் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்றார்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த முதல் கணவர் வேலுவுடன், பிரியங்கா சேர்ந்து வாழ்த் தொடங்கினார். பொதுவாக நாள்தோறும் வேலுவும், அவருடன் சேர்ந்து பிரியங்காவும் மது அருந்துவார்களாம். போதையில் இருவரும் சேர்ந்து குழந்தைகளை அடித்து உதைப்பது வழக்கம் என பக்கத்து வீடுகளில் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிரியங்கா பரிமாறிய பிரியாணி ருசியாக இல்லை என்று வேலு சண்டைபோட்டார். அந்த சண்டையால் ஏற்பட்ட கோபத்தில் பிரியங்கா குழந்தை மீது பாயத்தொடங்கினார்.
அப்போது இரண்டாவது கணவருக்குப் பிறந்த தனது ஒன்றரை வயது 2-வது குழந்தை புஷ்பத்தை கீழே தள்ளி ப்ரியங்கா காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது. அதில் குழந்தையின் மூக்கு, வாயில் இருந்து ரத்தம் வடிந்தது.
உடனே குழந்தைக்கு வயிற்று வலி என்றும், அதற்கு மருந்து கொடுத்ததால் மூக்கு, வாயில் ரத்தம் வடிகிறது என்று பொய்யான தகவலை கூறி குழந்தையை கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் குழந்தை புஷ்பம் பரிதாபமாக இறந்துபோனது. டி.பி.சத்திரம் போலீசாரிடமும் அதேபோல பொய்யான தகவலை கொடுத்தனர். ஆனால் டாக்டர்கள் குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று புஷ்பத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் வேலு மற்றும் பிரியங்காவிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குழந்தை புஷ்பத்தை காலால் மிதித்ததை பிரியங்கா ஒப்புக்கொண்டார். இதனால் கொலை வழக்கில் பிரியங்காவும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேலுவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
பெற்ற குழந்தையை தாயே மிதித்து கொன்ற சம்பவம் டி.பி.சத்திரம், செனாய்நகர் பகுதிகளில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.