சூறாவளி காற்றில் பறந்த அடையாறு ஆனந்த பவன் மேற்கூரை…. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம்…

First Published May 19, 2018, 11:56 PM IST
Highlights
Adayar ananda bavan hotel accident 3 dead


சேலம் நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், ஹோட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நெய்க்காரப்பட்டியில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் ஆஸ்பெடாஸ்  மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் அங்கு உடனடியாக விரைந்து சென்று ஜே.சி.பி. உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த இருவரது உடலை போலீசார் மீட்டனர்.

விசாரணையில் ஒருவர் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த நூருல் அமீன் என்பதும், மற்றொருவர் உணவகத்தில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அதில் நூருல் அமீனுடன் வந்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த சையது அலி என்பவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

click me!