தொழில்போட்டியால் பெண் டாக்டரை கூலிப்படை வைத்து வெட்டிய டாக்டர்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

First Published Oct 5, 2017, 7:54 PM IST
Highlights
lady doctor attacked by coolies and male doctor because of business competition


தொழில் போட்டி காரணத்தால், சென்னையில் முன்னணி மகப்பேறு சிகிச்சை பெண் டாக்டரை, ஆண் டாக்டர் ஒருவர் கூலிப்படையை வைத்துக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய  டாக்டர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினரை சென்னை மாநகரக் காவல் ஆணையர் பாராட்டிளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில்,  படேல் ரோடில் வசித்து வரும் குழந்தைப் பேறு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரம்யா ராமலிங்கம். அந்தப் பகுதியில் இவர் பிரபலமாகி விட்டவர். பணி முடிந்த பின்னர், வழக்கம் போல் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். தனது வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள்  செல்ல முயன்றவரை ஒருவர் தடுத்துள்ளார். அப்போது அவர், இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா அணிந்திருந்தாராம். எனவே  அவர் ஏதோ பெண்மணிதான் என்று எண்ணியிருந்தபோது, திடீரென அந்த நபர்,  டாக்டர் ரம்யாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். 

திடீரென நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரம்யா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அந்த நபரைத் தொடர்ந்து பைக்கில் வெளியில் காத்திருந்த மேலும் 2 பேரும் அங்கே புகுந்து, ரம்யாவை சரமாரியாகத் தாக்கிவிட்டு வெளியில் ஓடியுள்ளனர். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கே ஓடி வந்துள்ளனர். அப்போது,  அங்கிருந்து ஓடிய பர்தா அணிந்த அந்த மர்ம நபர், வெளியில் காத்திருந்த பைக்கில் ஏறித் தப்பியுள்ளார். அவ்வாறு அவர் ஓடியபோது, அவர் அணிந்திருந்த புர்கா விலகியதால், அவர் ஆண் என்பதை அங்கிருந்தோர் அடையாளம் கண்டுள்ளனர். இதை அடுத்து, அருகில் குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து செம்பியம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.   அப்போது தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை முயற்சி நடைபெற்றது தெரியவந்துள்ளது. சென்னை, அமைந்தகரையில் சென்னை குழந்தைப் பேறு மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் விஎம்.தாமஸ் என்பவர், ரம்யாவைக் கொல்ல கூலிப்படையை ஏவியது தெரியவந்துள்ளது. 
 
இதை அடுத்து, டாக்டர் தாமஸ், அந்த மருத்துவமனை ஊழியர்கள் யோனா, சத்யகலா, பவானி ஆகியோரையும், கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த முகிலன், பழனிசாமி ஆகியோரையும்  தனிப்படை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை டாக்டர் தாமஸ், சென்னையில் எண்ணூரைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து ரம்யாவைக் கொலை செய்ய அமர்த்தியுள்ளது தெரியவந்தது. 

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைப் பேறு மருத்துவத்தில் டாக்டர் ரம்யா நல்ல பெயரைப் பெற்றுள்ளார். அவர், கடந்த  மூன்று ஆண்டுகளாக டாக்டர் தாமஸ் நடத்திவரும் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், டாக்டர் ரம்யா, அண்மையில் கோயம்பேட்டில் ஜீவன்மித்ரா குழந்தைப் பேறு மருத்துவமனை என ஒன்றைத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தாமஸின் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாம். இதனால் ரம்யாவை மீண்டும் தன் மருத்துவமனைக்கே வந்து பணிசெய்யும்படி தாமஸ் கூறியும் ரம்யா மறுத்தாராம். எனவே, கூலிப்படையை ஏவி ரம்யாவைக் கொலை செய்ய தாமஸ் முயற்சி செய்ததாக போலீஸார் கூறினர். 

click me!