திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை - ஆசைவார்த்தை கூறி சென்னை எஸ்ஐ ஜல்சா

 
Published : Oct 12, 2016, 11:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை - ஆசைவார்த்தை கூறி சென்னை எஸ்ஐ ஜல்சா

சுருக்கம்

திருமண ஆசை காட்டிய சென்னை எஸ்ஐ, பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால், பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வசந்தி நகரை சேர்ந்த சண்முகம். இவரது மகள் ராமு (29). அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். ராமு சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 9ம் தேதி வேலை முடிந்து, வீடு திரும்பிய அவர், தனது அறைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராமு படுக்கையில் மயங்கிய நிலையில், மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். அருகில் விஷ பாட்டில் இருந்தது.

உடனே குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ராமு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

புகாரின்படி வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததை பற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ராமு வேலை பார்த்தார்.

அந்த நேரத்தில் ராமு, ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு வேலை விஷயமாக அடிக்கடி சென்றுவந்தார். அப்போது டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்த அருமைநாயகம் என்பவருடன் ராமுவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அருமைநாயகம் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் அருமைநாயகம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், ராமுவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதை நம்பிய அவரும், காதலித்து வந்துள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட அருமைநாயகம், ராமுவை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அருமை நாயகம் எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டார். அவர், சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். ராமுவும் அம்பா சமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, அங்கேயே வேலை செய்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் ராமு, அருமைநாயகத்தை செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு, தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை அருமைநாயகம் கூறினார். மேலும், ராமுவை திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதைக் கேட்டு ராமு அதிர்ச்சியடைந்தார்.

உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் அருமைநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமு, அம்பாசமுத்திரம் மகளிர் போலீசில், புகார் செய்தார். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ராமு புகார் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டு உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் மகளிர் போலீசார், அருமைநாயகம் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் ராமு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது என்றார்.

இதற்கிடையில், ஐகிரவுண்டு மருத்துவமனை முன்பு நேற்று காலை ராமுவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டனர். ராமு தற்கொலைக்கு காரணமான பயிற்சி எஸ்ஐ அருமைநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவரை ராமுவின் சடலத்தை வாங்க மாட்டோம் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அனைவரும் நெல்லை சரக டி.ஐ.ஜி. தினகரன் பங்களாவை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். டி.ஐ.ஜி. தினகரனிடம் புகார் மனு ஒன்றும் கொடுத்தனர். அதை பெற்று கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!