
சிலைக்கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த டி.எஸ்.பி., காதர் பாட்ஷாவுக்கு ஜாமின் வழங்கி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது அங்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த காதர்பாட்ஷா, தலைமைக் காவலராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்ட போலீஸார் சிலைகளை கைப்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சென்னையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விலை பேசி விற்றனர்.
இந்தத் தகவலை அப்போது கான்ஸ்டபிளாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் பின்னாளில் கடிதமாக எழுதி அனுப்பி இருந்தார். இதனடிப்படையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த சுப்புராஜை சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இவர் ஜாமின் கோரி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் காதர் பாட்ஷாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.