தசரா விழாவால் குலுங்கிய குலசேகரபட்டினம்…. 6 லட்சம் கொண்டாடிய முத்தாரம்மன் கோவில் சூரம்சம்ஹாரம் !!

By Selvanayagam PFirst Published Oct 20, 2018, 8:15 AM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம்  குலசேகர பட்டினத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில்  6 லட்சம் பேர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10-ம் திருநாளான நேற்று விழாவின் உச்சபட்ச  நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

முதலில் மகிஷாசூரன், அம்மனை சுற்றிவந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.

அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார்.

சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

click me!