
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்து மூன்று வருடங்கள் ஆகியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்; இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கு அடிமைகளைப் போல செயல்பட்டு விட்டு வீரத்தோடு போராடிய கூடிய மக்களின் உறுதியை நிலை குலையச் செய்வதற்காகவா டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்கள்.? என திருமாவளவனை கிருஷண்சாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கவினின் தந்தையின் ஆணித்தரமான கோரிக்கை
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் ஆறுமுகமங்கலம் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்கள் ஐந்து நாட்கள் நடத்திய வீரமிகு போராட்டம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கவின் கொலைக்குத் தூண்டுதலாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் துணை ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி மற்றும் பல மாதங்களுக்கு முன்னரே கவின் - சுபாஷினி நட்பை முறிக்க முயன்று, இக்கொலைக்கு ஏதாவது வகையில் காரணமாக இருந்த ஆய்வாளர் காசிபாண்டியனையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பதே கவினின் தந்தை சந்திரசேகர் அவர்களின் மிக முக்கிய கோரிக்கைகள் ஆகும். ”ரூபாய் கோடியேயானாலும் நிதி வேண்டாம்; நீதி தான் வேண்டும்” என்பதே கவினின் தந்தையின் ஆணித்தரமான கோரிக்கையாக இருந்தது.
எந்த ஒரு வழக்கிலும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. குறிப்பாக, கொலைக் குற்றம் போன்ற பெரிய குற்றங்களில் எவ்விதத் தலையீடும் இருக்கக்கூடாது என்பதே நியதி. ஆனால், இரண்டு முக்கியமான அமைச்சர்களும், அக்காவும், புரோக்கர்களும் அங்கேயே முகாமிட்டு, அவர்களின் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்து, எப்படியாவது கவினின் உடலை வாங்க வைக்கப் பல வழிகளைக் கையாண்டுள்ளனர்.
பழைய மற்றும் புதுப்புது கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள்
27 வயது இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இது. குற்றவாளிகள் மறைக்கப்படும்பொழுது, அதை வெளிக்கொணரப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அன்னம், தண்ணீர் கூட இல்லாமல் ஐந்து நாட்களாக போராடி வந்தனர். நடுநிலையோடு நின்று நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் குற்றச் செயலுக்குத் துணை போவது எந்த விதத்தில் நியாயம்? முதல் தகவல் அறிக்கையிலேயே குற்றவாளியின் தாயார் கிருஷ்ணவேணியின் பெயர் இருக்கும்பொழுது, உடனடியாக அவரையும் கைது செய்திருக்க வேண்டுமா, இல்லையா? குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டுவிட்டு, மகனை இழந்த பெற்றோரைச் சமாதானப்படுத்துவதும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதுமாக கடந்த நான்கு நாட்களில் அமைச்சர்களும் அதிகாரிகளும் செயல்பட்டு இருக்கிறார்கள்; போதாகுறைக்கு பழைய மற்றும் புதுப்புது கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அரிவாள் பயிற்சி
இப்பொழுது ஒருதலைப்பட்சமாகச் செயல்படக்கூடியவர்கள் வழக்கை எப்படி நேர்மையாக நடத்துவார்கள்? தென் தமிழகத்தில் பல நான்கு வருடங்களாக நடந்துவரும் மிருகத்தனமான சாதிவெறிக் கொலைகளின் தொடர்ச்சியே ஆகும். ஆத்திரத்திலோ அல்லது கோபத்திலோ நடந்தேறிய கொலை அல்ல. கொலையாளி பல நாள்கள் அரிவாள் பயிற்சி எடுத்துள்ளதும், பல கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளன. நன்கு திட்டமிட்டு நடத்திய கொலையே இது. குறிப்பாக, தேவேந்திரகுல வேளாளர் / ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிரான போர் ஆகும்!
எவ்விதத்தில் நியாயம்?
கொலையாளிகளின் குடும்பத்தார்கள், அவனுக்கு அரிவாள் பயிற்சிக் கொடுத்தவர்கள், பஞ்சாயத்து செய்த காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் அனைவரும் வழக்கின் வளையத்திக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே கவின் பெற்றோர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருந்தது. இதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்யவும், கவினின் சடலத்தை வாங்கவும், ஆசை வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் எனப் பல வழிகளிலும் புரோக்கர்களின் துணையுடன் அழுத்தம் கொடுக்கப்பட்டது எவ்விதத்தில் நியாயம்?
டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்கள்?
திருநெல்வேலியை மையமாக வைத்துச் செயல்பட்டுவரும் கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் என்ன சம்பந்தம்? அந்த நபருடன் அமைச்சர்கள் வரவேண்டிய அவசியம் என்ன? புதிது புதிதாக சினிமாவால் முகவரி பெற்றவர்களும் தன் சொந்தச் சாதிக்கே குந்தகம் விளைவிக்கிறார்கள்.!
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்து மூன்று வருடங்கள் ஆகியும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள்; இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கு அடிமைகளைப் போல செயல்பட்டு விட்டு வீரத்தோடு போராடிய கூடிய மக்களின் உறுதியை நிலை குலையச் செய்வதற்காகவா டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்கள்.?
பாடி வண்டிகளான புரோக்கர்கள்
மலையைப் போல நிலைகுலையாமல் இருந்து வந்த கவினின் தந்தை சந்திரசேகரையும் நிலைகுலைய வைத்து, பிரேதத்தை வாங்கி கொடுத்து உங்களின் அரச விசுவாசத்தை அப்படியே முழுமையாகக் காட்டி விட்டீர்கள்? கொலை செய்தவன், உற்ற துணையாக நின்ற குடும்பத்தார், உற்றார் உறவினர், ஆயுத சப்ளை செய்தவர்கள், ”பாடி வண்டிகளான புரோக்கர்கள்” அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படும் நிலை விரைவில் உருவாகும்; அதற்கு புதிய தமிழகம் என்றென்றும் துணை நிற்கும். கவின் உடல் எரிக்கப்பட்டிருக்கலாம்! நீதியை எரிக்க முடியுமா? தென் தமிழகத்தில் அதிகரித்து வரும் ’சாதீ’ முற்றாக அணைக்கப்படும் காலம் உருவாகும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.