
அம்மாவை கேட்டதால், 3 வயது சிறுவனை கை, கால்களை கட்டிப்போட்டு பிரம்பால் அடித்த அங்கன்வாடி பெண் காப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி குரும்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு மகன் அஷ்வத் (3). இதே பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு காப்பாளராக மல்லிகா என்பவர் வேலை பார்க்கிறார்.
தற்போது, அஷ்வத்தை அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விஜயகுமார் சேர்த்தார். நேற்று காலை அஷ்வத்தை, மல்லிகா அங்கன்வாடி மையத்தில் விட்டு சென்றார். அதன்பின்னர், அம்மா வேண்டும் என குழந்தை அஷ்வத் அழுது கொண்டிருந்தான்.
மாலையில், குழந்தையை அழைத்து வர பெற்றோர் சென்றனர். அங்குள்ள அறையில் சிறுவன் தூங்குவதாக கூறிய மல்லிகா, இரவு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அஷ்வத்துக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்தவற்காக டாக்டர், உடைகளை கழற்றினார். அப்போது, உடல் முழுவதும் காயம் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இதையடுத்து குழந்தை அஷ்வத்திடம் விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்தில் அம்மா வேண்டும் என அழுத்தால், காப்பாளர் மல்லிகா, கை மற்றும் கால்களை கட்டி வைத்து அடித்தது தெரிந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், இன்று காலை மல்லிகாவை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை மல்லிகா அடித்தது தெரியவந்தது. இதையடுத்து மல்லிகவை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.