
தமிழகத்தில் பதிவுசெய்யாமல், வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயக்கப்படும் தனியார் ஆம்னி படுக்கை வசதி கொண்ட பஸ்களை கண்காணித்து, அவற்றின் அனுமதியை ரத்து செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான “ஸ்லீப்பர் கோச்” பஸ்கள் அதாவது, படுக்கை வசதி கொண்ட பஸ்கள்ள், வடகிழக்குமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
ஏனென்றால்,அங்கு பதிவுக்கட்டணம் 3 மாதங்களுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு மேல்செலுத்த வேண்டாம். இதுவே புதுச்சேரியாக இருந்தால்,ரூ. 40 ஆயிரத்துக்குள் செலுத்தினால் போதுமானது.
ஆனால், தமிழகத்தில் பதிவு செய்தால், ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ஒரு படுக்கை ஒன்றுக்கு ரூ.600 செலுத்த வேண்டும், அதனால்தான், தனியார் ஆம்னி பஸ்கள் வெளிமாநிலங்களில் தங்கள் பஸ்களை பதிவு செய்கிறார்கள்.
இந்த பஸ்களின் எப்.சி. எனப்படும் தகுதிச்சான்றிதழை, அந்த மாநிலத்தின் ஆர்.டி.ஓ. அலுவலரிடம் இருந்து பெற வேண்டும்.
ஆனால், இந்த பஸ்களின் ஏஜென்டாக இருக்கும் நபர்கள் அந்த குறிப்பிட்ட மாநிலத்துக்கு சென்று முறைப்படி “அதிகாரிகளுக்கு எப்படி கவனிக்க” வேண்டுமோ அப்படி கவனித்து, சான்றிதழை வாங்கி வந்துவிடுகிறார்கள். இதுதான் இப்போதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
அவ்வாறு வடகிழக்கு மாநிலத்தில் பதிவு செய்து இயக்கப்படும் ஆம்னி சொகுசு பஸ்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில்தான் அதிகம்.
இது குறித்து வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், ஆகிய அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி மற்ற மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பிவிட்டன. இதையடுத்து, கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் வடகிழக்கு மாநில பதிவு எண்ணில் ஓடும் பஸ்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டன.
தமிழகத்தைப் பொருத்தவரை 700 ஆம்னி சொகுசு பஸ்கள், இதுபோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி சில நாட்களில் கிடைத்துவிடும். அதன்பின், வெளிமாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு நடவடிக்ைக எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.