
திமுகவுக்கு இணங்கி செல்வதையும், பாஜகவுக்கு அடிமைப்பட்டு போவதையும் சுட்டிக்காட்டி இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்து சொன்னால் திமுக ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பாஜகவின் சித்தாந்தத்தோடு சேர்ந்து பயணித்தால் அதிமுக தன் வாக்கு வங்கியை இழக்க நேரிடும், சித்தாந்த ரீதியாக அதிமுக ஒரு திராவிட கட்சி, RSS நிகழ்ச்சிகளிலும், இந்து முன்னணி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் போது அவர்கள் அறிஞர் அண்ணாவையும், பெரியாரையும் விமர்சிப்பது அதிமுக திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி செல்வதாகிவிடும். அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இதை எடுத்துக்கூறினால் உடனே திமுகவை ஆதிரிகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமியை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
யார் திமுகவை ஆதரிப்பது?
* நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திமுகவினருக்கு எவ்வளவோ காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார், மருத்துவக் கல்லூரி கொடுத்திருக்கிறார் இன்னும் நிறைய சலுகைகள் கொடுத்திருக்கிறார். ஆனால் அதிமுக கட்சிக்காரர்களுக்கு கடை நிலையில் உள்ள ஒரு வேலை வேண்டும் என்றால் கூட 5 முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கேட்டார்கள்.
* முன்னாள் ஊழல் அமைச்சர்களை 90 நாட்களில் கைது செய்வேன் என்று ஸ்டாலின் அவர்கள் கூறினார், இன்று வரை EPS & Co மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? இதில் இருந்தே பெரிய அளவு இவர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.
* எடப்பாடி பழனிசாமி இதுவரை பெரிதாக ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்தியிருக்கிறாரா? இவர் ஆட்சி காலத்தில் இருந்த அதே காண்ட்ராக்டர்களையும், அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு ஒப்பந்த அடிப்படையில் "உங்கள் ஊழலை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம், எங்கள் ஊழலை நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள்" என்கிற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
* கொடநாடு வழக்கு என்ன ஆனது? அம்மா அவர்களின் மரணத்தில் இருந்த மர்மம் என்ன ஆனது? இதை பற்றியெல்லாம் ஸ்டாலின் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே அதற்கு என்ன காரணம்?
* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே கைகலப்புகள் நடந்தது, பலர் உயிர் தியாகம் எல்லாம் செய்தார்கள், ஜெயலலிதா அம்மா காலத்தில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து சட்ட ரீதியான மோதல்கள் இருந்தது. ஆனால் எடப்பாடி காலத்தில் இதுபோன்று உள்ளதா? திமுகவுடன் இணைந்து லஞ்ச லாவண்யதோடு தானே பயணிக்கிறார்கள்.
* இவர்கள் திமுகவுக்கு இணங்கி செல்வதையும், பாஜகவுக்கு அடிமைப்பட்டு போவதையும் சுட்டிக்காட்டி இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்து சொன்னால் திமுக ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள். உண்மையில் எடப்பாடி பழனிசாமி தான் மறைமுகமாக திமுக ஆள்வதற்குண்டான வழிவகையை செய்துகொண்டிருக்கிறார். தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார். இதெல்லாம் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கு புரியாமல் இல்லை என தெரிவித்துள்ளார்.