
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 40 உயிர்கள் பறிபோன நிலையில், இந்த சம்பவத்தில் ஆளும் திமுக அரசும், தவெகவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கரூரில் விஜய் பேசியபோது திடீரென மின் தடை ஏற்பட்டதால் இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தவெகவினர் குற்றம்சாட்டினர். தமிழக அரசு திட்டமிட்டு மின் தடை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விஜய் கூட்டத்தில் மின் தடை செய்யவில்லை என மின்சார வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ''விஜய் பிரசாரம் செய்யும்போது எந்த மின் தடையும் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஏற்பாடு செய்த ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கிய மின் விளக்குகள் மட்டுமே அணைந்தன. மின்சார வாரியம் சார்பில் எந்த மின் தடையும் செய்யப்படவில்லை. ஏனெனில் கரூரி விஜய் பேசும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
மின் தடை செய்யப்படவில்லை
தவெகவினர் சிலர் மரத்தில் ஏறியபோது மின் தடை செய்யப்பட்டு, அவர்கள் கீழே இறங்கியம் மின்விநியோகம் செய்யப்பட்டது. விஜய் பிரசாரம் செய்யும்போது எந்த மின் தடையும் செய்யப்படவில்லை. கரூர் தவெக கூட்டம் நடக்கும்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்படது. ஆனால் அவர்களின் கோரிக்கையை மின்சார வாரியம் ஏற்கவில்லை'' என்று தெரிவித்தார்.
தவெகவினர் ஒத்துழைப்பு தரவில்லை
இதேபோல் பேசிய ஏடிஜிபி டேவிட்சன் தேவார்சிவாதம், ''கரூர் கூட்டத்தில் போதிய காவலர்கள் இருந்தனர். அங்கு எந்த கல்வீச்சு சம்பவங்களும் நடக்கவில்லை. எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும், அதை தவெகவினர் மீறியதால் காவல் துறையால் என்ன செய்ய முடியும்?'' என்று தெரிவித்தார்.