
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி (கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெனரல்) டேவிடசன் தேவாசிர்வாதம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "விஜய் பிரசாரக் கூட்டத்தில் போதிய அளவு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 20 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பிரசாரக் கூட்டத்தின் போது கல்வீச்சுச் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை."
பிரச்சாரத்தின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஏடிஜிபி, “கூட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்படவில்லை. மின் விநியோகம் சீராகவே இருந்தது” என்றார்.
பாதுகாப்புக் குறைபாடு, வெளியாட்களின் அத்துமீறல் மற்றும் சதி போன்ற குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக, கூட்டத்திற்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், வெளியிலிருந்து எந்தவிதமான இடையூறுகளும் நிகழவில்லை என்றும் ஏடிஜிபி டேவிடசன் தேவாசிர்வாதம் தனது விளக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைத்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விசாரணையைத் தொடர்ந்து கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.