
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறித்து விஜய் பாடிய பாடல்தான் காரணம் என்றும், பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு தலைவர் கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவை சத்யன் தெரிவித்ததாவது:
"நடிகர் விஜய், தனது பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறித்து 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' என்று பாடத் தொடங்கியதான் எல்லாவற்றுக்கும் காரணம். விஜய் இவ்வாறு பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் தயாராக இருந்த 'தீய சக்திகள்' செருப்பு வீசினர். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதுவே கூட்ட நெரிசல் கலவரமாக மாற முக்கியக் காரணம் என நாங்கள் கருதுகிறோம்.
"கரூருக்கு விரைந்து வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60 உயிர்கள் பறிபோனபோது எங்கே இருந்தார்?" என்று கோவை சத்யன் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற பேரிடர் காலங்களில் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல், தி.மு.க. அரசு பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி அடைந்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், த.வெ.க. கட்சித் தலைமைக்கு இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாளத் தெரியவில்லை என்றும், இந்தச் சம்பவத்திலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோவை சத்யன் அறிவுரை வழங்கியுள்ளார்.