
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில், விஜய் முதல்முறையாக வீடியோ வெளியிட்டுப் பேசியுள்ளார்.
அப்போது, வழக்குப் பதிவுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், பழிவாங்கும் வேண்டும் என்று கருதினால் தன்னைப் பழிவாங்கும்படி முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுத்திருக்கிறார்.
''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நானும் மனுஷன்தானே. வேறு அசம்பாவிதம் ஏற்படும் சூழலைத் தவிர்க்கவே நான் உடனே ஹாஸ்பிடல் போகவில்லை. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்குப் போயிருக்கிறோம். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது." என்று விஜய் கூறியுள்ளார்.
"எங்களுக்குத் தரப்பட்ட இடத்திற்குப் போய், பேசிவிட்டு வந்ததைத் தவிர நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், தோழர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் சார், உங்களுக்குப் பழி வாங்கணும்னு தோணுச்சின்னா என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. அவங்க (தொண்டர்கள்) மேல கை வைக்காதீங்க. நான் வீட்ல இருப்பேன், இல்லன்னா ஆபீஸ்ல இருப்பேன். அவங்க மேல கை வைக்காதீங்க."
இவ்வாறு, தனது மக்கள் இயக்க நிர்வாகிகளைக் குறிவைத்து வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு நடிகர் விஜய் உருக்கத்துடன் பேசியுள்ளார்.