
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்ட நெரிசல் நடந்த உடன் மதியழகன் தலைமறைவாக சென்று விட்டார். இவர் தான் கரூரில் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார்.
ஆகையால் மதியழகன் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். தலைமறைவான அவரை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதியழகன் கரூர் புறநகர் பகுதியில் இன்று இரவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் விஜய் பெயரும் சேர்க்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
மதியழகன் மட்டுமின்றி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த் 2வது குற்றவாளியாகவும், சி.டி. நிர்மல் குமார் 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடன் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டார்.
அடுத்தடுத்து கைது நடக்க வாய்ப்பு
புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி. நிர்மல் குமாரை பிடிக்க கரூர் ஏ.டி.எஸ்.பி பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவலர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இன்று நள்ளிரவில் இவர்கள் இவரும் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.