சென்னையில் 50 கோவில்களுக்கு குடமுழுக்கு! தேதி குறித்த அமைச்சர் சேகர்பாபு!

Published : Sep 29, 2025, 09:38 PM IST
Sekar babu

சுருக்கம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் 50 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தவும், 8 முக்கிய கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், இன்று (திங்கட்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் சென்னை மண்டலங்களைச் சேர்ந்த இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகர் மற்றும் புறநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் 3 மண்டலங்களைச் சேர்ந்த கோயில்களில் தற்போது நடைபெற்று வரும் திருப்பணிகள், மரத்தேர், தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள், திருக்குளங்களின் சீரமைப்புப் பணிகள், கேட்பு வசூல் விவரங்கள், நிலமீட்பு மற்றும் நில அளவைப் பணிகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

அமைச்சர் சேகர்பாபு உரை:

ஆய்வுக்குப் பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாப, "இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், இதுவரை ரூ.1,187.83 கோடியை அரசு நிதியாக வழங்கியுள்ளது. இந்தத் துறை தொடங்கப்பட்ட நாள் முதல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

விரைவில் குடமுழுக்கு விழாக்கள்:

மேலும், சென்னை மண்டலங்களில் மட்டும் 46 (ii) பட்டியலைச் சார்ந்த ஓட்டேரி செல்லப்பிள்ளைராயர் கோயில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், கொடுங்கையூர் பவானியம்மன் கோயில், கொண்டிதோப்பு காசி விஸ்வநாதர் கோயில், கொளத்தூர் சோமநாதசுவாமி கோயில், பெசன்ட்நகர் மகாலட்சுமி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், போரூர் இராமநாதீஸ்வரர் கோயில் ஆகிய 8 திருக்கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது என்று அறிவித்தார்.

"இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை மண்டலங்களில் 50 திருக்கோயில்களுக்குத் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி, இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் பணியாற்றிட வேண்டும்" என்றும் அமைச்சர் சேகர்பாபு செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!