
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக பதிவான இந்த சம்பவம் குறித்து நாடே பேசி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறுபக்கம் காவல் துறையும் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. அதே வேளையில் கரூர் சம்பவம் குறித்து ஒரு சிலர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். கரூர் சம்பவத்துக்கு ஆளும் கட்சி தான் காரணம் என்று கூறி அவதூறு வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படியாக அவதூறு பரப்புபவர்களை கண்டறிந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ பரப்பியதாக சென்னையை சேர்ந்த சகாயம். சிவனேசன், சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவனேசன், சரத்குமார் ஆகியோர் தவெகவில் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
பொது அமைதிக்கு பங்கம் கூடாது
இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.