
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குழந்தைகளின் உடல்களை பார்த்து துக்கம் தாள முடியாமல் அன்பில் மகேஷ் கதறி அழுதார்.
அப்போது செந்தில் பாலாஜி அவருக்கு ஆறுதல் கூறினார். 'குழந்தைகள் இறப்பை தாங்க முடியாத சோகத்தில் அன்பில் மகேஷ் கதறி அழுதார். இவர் தான் மக்களுக்கான தலைவர்' என்று திமுகவினர் தெரிவித்தனர். அதே வேளையில் ''அன்பில் மகேஷ் நன்றாக நடிக்கிறார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தபோது இந்த அழுகை ஏன் வரவில்லை?'' என்று தவெகவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதற்கிடையே கரூரில் அழுது புலம்பிய அந்த அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் அன்பில் மகேஷை கிண்டலடித்தார். ''கரூரில் இறந்தவர்களை பார்த்து அழுது புலம்பிய அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் நேரில் செல்லாத முதல்வர் கரூருக்கு இரவோடு இரவாக செல்கிறார். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியிருந்தார்.
கொச்சையாக பேசிய அன்புமணி
இந்நிலையில், சொந்த தந்தையையே கொச்சைப்படுத்தியவரின் கருத்தை நாம் மதிக்க தேவையில்லை என்று அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அன்பில் மகேஷ், ''மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ் நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
நான் மக்களில் ஒருவன்
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்! எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”.
சொந்த தந்தையை கொச்சைப்படுத்தியவர்
தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்'' என்று கூறியுள்ளார்.