நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்காதீர்கள்.. மக்களை பாருங்க.. கட்சிகளை விளாசிய நீதிபதிகள்!

Published : Oct 03, 2025, 02:47 PM ISTUpdated : Oct 03, 2025, 02:56 PM IST
Madurai Court

சுருக்கம்

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்காதீர்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 7 மனுக்கள், நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு வாதம்

மனுதாரர் தரப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள், "சம்பவம் நடந்த தகவல் அறிந்தவுடன் முதலமைச்சர் உடனடியாகப் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அன்றைய இரவிலேயே சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். இந்த 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டனர்.

மேலும், கூட்டத்திற்கு டிஜிபி தரப்பில் 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் எதையுமே தவெகவினர் பின்பற்றவில்லை என்றும், பிரசாரம் செய்வதற்கு 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததாலேயே பொதுமக்களுக்கு ஏற்பட்ட சோர்வு உயிரிழப்புகளுக்குக் காரணமாகிவிட்டது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகளின் கேள்விகள்

அரசு தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதி மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், "கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம். பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே. அரசின் பாதுகாப்பு அமைப்புகள் முறையாகச் செயல்பட வேண்டும். மக்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பொதுமக்களின் உயிரைக் காப்பது அரசின் கடமை" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தவெக தரப்பினர் தங்கள் வாதத்தில், கரூர் சம்பவத்துக்கு அனைத்துத் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தாங்கள் கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றும் கூறினர். மேலும், இந்தக் கூட்டத்தில் குண்டர்கள் சிலர் புகுந்து ரகளை செய்ததாகவும், காலணிகளும் வீசப்பட்டதாகவும், காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் வாதிட்டனர்.

உயர் நீதிமன்ற உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் கூட்டம் நடத்தலாம்" என உத்தரவிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக ஆதரவாளர் கே.எல்.ரவி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். "ஆரம்ப நிலையிலேயே சிபிஐ விசாரணைக்கு எப்படி மாற்ற முடியும்? விசாரணையில் திருப்தி இல்லையென்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரலாம். மேலும் மனுத்தாக்கல் செய்தவர் பாதிக்கப்பட்டவரா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் எப்படி உத்தரவிட முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்காதீர்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இழப்பீடு மற்றும் இழப்பீடு அதிகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழக அரசு தரப்பில் இருந்து 2 வார காலத்திற்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ஆள்.. அவரை மக்கள் வெறுக்கிறார்கள்..! அமைச்சர் செழியன் ஆவேசம்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!