ஒருவரை ஒருவர் காப்பாற்ற நினைத்து 4 பள்ளி மாணவிகள் காவிரியில் மூழ்கி பலி

By Velmurugan sFirst Published Feb 15, 2023, 2:27 PM IST
Highlights

புதுக்கோட்டையில் இருந்து விளையாட்டு போட்டிக்காக கரூர் சென்ற பள்ளி மாணவிகள் மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த போது ஆற்றில் மூழ்கி நான்கு பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள், கால் பந்தாட்ட வீரர்கள். உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன்  திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிக்காக அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  விளையாட்டு போட்டி முடித்துவிட்டு மாயனூர் காவிரி கதவணையை பார்ப்பதற்காக வந்த போது அதன் அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஆற்றிற்குள் இறங்கி உள்ளனர். அப்போது உள்ளே சென்ற மாணவி நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். அவரை காப்பாற்றும் முனைப்பில் அடுத்தடுத்து சென்ற மாணவிகளும் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா என நான்கு மாணவிகள் நீரில் மூழ்கினர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நீரில் மூழ்கிய 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

click me!