
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நள்ளிரவு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கரூர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்கள் இடையே நலம் விசாரித்தார். இன்று கரூர் தவெக பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோனது இல்லை . ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்து இருக்கலாம்.
எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் என்றால் முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்குவது இல்லை. அதுவே ஆளும்கட்சி என்றால் பாதுகாப்பு முறையாக வழங்கப்படுகிறது. காவல்துறை பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும்.
AIR SHOW-வில் முறையான பாதுகாப்பு வழங்காததாலே 5 பேர் இறந்தனர். இதில் பாடம் கற்காத ஸ்டாலினின் அலட்சியத்தால் மற்றொரு பெருந்துயரம் நடந்துள்ளது.” என்று கூறினார்.