மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படம்… சர்ச்சையை கிளப்பிய திமுக பிரமுகர்கள்!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 4:58 PM IST
Highlights

மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கருணாநிதியின் படமும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏழை மக்களின் பசியை போக்க உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை உருவாக்கி அதனை மக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்தார். இந்த உணவகத்தில் குறைந்த விலை உணவுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கிராமபுற ஏழைகளுக்கு உணவை உறுதி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் இருக்கும் நிலையில் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 வேளை உணவை உறுதிப்படுத்துவதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி சென்னையில் முதன் முறையாக மலிவு விலை அம்மா உணவகங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. பின்னர் தமிழத்தில் உள்ள மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கு 2 உணவகங்கள் விகிதம் 400 உணவகங்களும், மிக முக்கிய அரசு மருத்துவமனைகளான ஸ்டேன்லி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட  மருத்துவமனைகளில் 7 என மொத்தமாக 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.  சென்னை அல்லாத தமிழகத்தின் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 247 அம்மா உணவகங்கள் என தமிழகம் முழுதும் மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது சிறிய மாற்றங்களுடன் செயல்படும் இந்த உணவகத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், வண்டி தொழிலாளர்கள், முதியோர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினர் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர்  அம்மா உணவகத்தை தி.மு.கவினர் சிலர் சூறையாடினர். அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேனர்கள் கிழிக்கப்பட்டன. அதன் வீடியோ வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் மீது கட்சி தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். அதை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பனிரெண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு தி.மு.க பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன. இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. 

click me!