தாயின் 2வது கணவரால் எரிக்கப்பட்ட சிறுமி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… நெல்லையில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 4:03 PM IST
Highlights

தாயின் இரண்டாவது கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தாயின் இரண்டாவது கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பாரதி நகர் பகுதியில் வசித்து வரும் அந்தோணிராஜ் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இரண்டாவதாக சுஜா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். சுஜாவின் முதல் கணவர் எட்டு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதால் ஒரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஜேசு அந்தோணிராஜின் முதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வசித்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சுஜாவும் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் காவல்கிணறில் வசித்த நிலையில் பெற்றோர் இருவரும் ஹோட்டலில் வேலை செய்து வந்தார்கள். குழந்தைகள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர்களின் குழந்தைகள் அங்குள்ள பேக்கரியில் தின்பண்டங்களைத் திருடியதாகக் கடையின் உரிமையாளர் ஜேசு அந்தோணிராஜிடம் புகார் செய்துள்ளார். அதனால் கோபமடைந்த அவர் வீட்டுக்குச் சென்று குழந்தைகளை அடித்துள்ளார். ஆனாலும் கோபம் தனியாத அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து குழந்தைகள் மீது ஊற்றியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த மாதேஷ், மகாராசி ஆகிய இரு குழந்தைகளும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டனர். 10 வயது சிறுமியான கடைசி குழந்தை மட்டும் மண்ணெண்ணெய்யுடன் இருந்த நிலையில் ஜேசு அந்தோணிராஜ் தீ வைத்துவிட்டார்.

அதனால் கதறித் துடித்த சிறுமி தந்தையின் கால்களைக் கட்டிப் பிடித்துள்ளது. அதில் ஜேசு அந்தோணிராஜுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சிறுமிக்கு 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்கிணறு காவல்துறையினர் ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஜேசு அந்தோணிராஜ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது குழந்தை உயிரிழந்ததால் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தின்பண்டம் திருடியதற்காக வளர்ப்புத் தந்தையே குழந்தையை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவத்தால் காவல்கிணறு பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர்.

click me!